நண்பர்களுக்கு நன்றி.
மீண்டும் எழுதுகிறேன். இந்த வேகம் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்குமென்று தெரியாது. எனது தொழில், வீட்டு நிலைமை, நண்பர்களின் போக்கு, கையிலிருக்கும் பணம், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகியன எழுத்தின் வேகத் தடைகளாக அமையும்.
நான் அந்த வீட்டு காலிங் பெல்லை அழுத்தும் பொழுது இரவு ஒன்பதரை மணியிருக்கும். முன்னிரவில் இதென்ன அநியாயம் என்று நீங்கள் நினைப்பதில் நியாயம் உண்டு. ஆனால், முஹம்மத் சேரை அப்பொழுதுதான் காண முடியும்.
வீட்டினுள்ளிருந்து குரல் கேட்டது. ‘யாரது...........?’-
‘அஸ்ஸலாமு அழைக்கும்......நான் பயாஸ் வந்திருக்கிறேன்.’- பதில் சொன்னேன்.
‘வஅழைக்கும் ஸலாம்.........இருங்கள் பயாஸ் வருகிறேன்......’ முஹம்மத் சேரின் உற்சாகமான பதில் கேட்டது.
வீட்டுக் கதவை திறப்பதற்கு முன்னால் முஹம்மத் சேரை, அவரது குடும்பத்தினரை உங்களுக்கு அவசரமாக அறிமுகம் செய்து விடுகிறேன். அவருக்கு வயது எழுபத்து மூன்றிருக்கும். அறுபது வயதுத் தோற்றம். நாற்பது வயது துடிதுடிப்பு. இளமையில் ஆசிரியராக உத்தியோகம் கிடைத்து உதவி அதிபராக பதவி உயர்ந்திருக்கிறார்.
இளமை தந்த முறுக்கில் அந்த உத்தியோகத்தை உதறித் தள்ளி உலகம் சுற்றி பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் கப்பலோட்டியாக கப்பலில் சேர்ந்திருக்கிறார். உலகை சுற்றி சுற்றி வந்திருக்கிறார். பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். பல்லின மக்களுடன் பழகி இருக்கிறார். அதன் உதவியால் சொந்தமாக வீடு கட்டினார். தௌஹீத் மருமகனுக்கு மகளை திருமணம் செய்துக் கொடுத்தார். மருமகனின் செல்வாக்கினால் முஹம்மத் சேரின் மகளும் தௌஹீத் ஆதரவாளர். முகம் மறைக்கும் ஹிஜாப் அணிவார். மகளையும் அணிவிப்பார். மகளின் ஆளுமையினால் முஹம்மத் சேரின் மனைவியும் தௌஹீத் ஆதரவுத் தாயாராக இருக்கிறார்.
அவரது மூத்த மகன் தப்லீக் அபிமானி. துணிச்சல் மிக்கவர். முரடன். மாளிகாவத்தை இளைஞர்களுடன் சுற்றித் திரிந்தான். ஒருமுறை அவனது வஹ்ஹாபிய தம்பியை தாதா ஒருவன் தாக்கவர அருகிலிருந்த கிரிக்கட் மட்டையினால் இவன் தலையில் விளாசித் தள்ளினான். தாதா ஒரு வாரம் சுய நினைவிழந்து வைத்தியசாலையில் இருந்தான். இவன் இருபத்தியொரு நாள் மகிழ்வுடன் சிறையில் இருந்து பெருமையுடன் வெளியே வந்தான். தாதா அடங்கிப் போனான். தம்பியின் வஹ்ஹாபிய போதனை எதிர்ப்பவரின்றி மக்கள் மயமானது.
சிங்கள இளம் பெண்ணொருவரை காதலித்து அவளை இஸ்லாத்துக்கு எடுத்து திருமணம் செய்தார். இப்பொழுது சவூதியில் இருக்கிறார். அவரும் உழைத்த பணத்தில் சொந்தமாக வீடு வாங்கி விட்டதாக அறிந்தேன்.
சிங்கள இளம் பெண்ணொருவரை காதலித்து அவளை இஸ்லாத்துக்கு எடுத்து திருமணம் செய்தார். இப்பொழுது சவூதியில் இருக்கிறார். அவரும் உழைத்த பணத்தில் சொந்தமாக வீடு வாங்கி விட்டதாக அறிந்தேன்.
முஹம்மத் சேரின் இளையவன் அயர்லாந்தில் இருக்கிறான். தீவிர வஹ்ஹாபி. இஹ்வானுள் முஸ்லிமீன் இயக்கம் சீசீயின் இராணுவத்தால் ஒடுக்கப்படும் நாளொன்றில் அலெக்சாந்திரியாவில் இருந்தான். ‘இந்த நேரத்தில் அங்கே என்ன வேலை?’ என்று நான் கேட்ட கேள்விக்கு காதலியை சந்திக்க வந்தேன் என்று சிரித்தான்.
சிரியாவின் அகதிகள் துருக்கிக்கு படையெடுக்கும் பொழுது இஸ்தான்புல்லில் இருந்தான். ‘இதென்ன இங்கே?’ என்ற எனது ஆச்சரியத்துக்கு காதலியைத் தேடி வந்தேன் என்று மீண்டும் அதே பதிலை குறும்புடன் கண் சிமிட்டி ஸ்கைப்பில் புன்னகைத்தான்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் கண்டி குண்டசாலையில் இருக்கும் பொழுது திடீரென கொழும்பிலிருந்து போன் செய்து வலிமாவுக்கு வரச் சொல்லி அதிர்ச்சியூட்டினான்.
முஹம்மத் சேர்?
தன்னை ஷியா என்று அழைத்துக் கொள்பவர். அஹ்ளுல்பைத்களுடன் நேசம் கொண்டவர். சுன்னி சமூகத்துடன் விரோதம் கொண்டவர். அன்னை ஆயிஷா ஸலாமுன் அலைஹா சம்பந்தமாக நல்ல அபிப்பிராயம் கொள்ளாதவர்.
அல்லாஹ்வின் அருளால் எனது அறபுகளின் நாயகியை வாசித்ததன் பின்னர் அன்னை ஆயிஷா ஸலாமுன் அலைஹா சம்பந்தமாக தனது அபிப்பிராயத்தை முற்றிலும் மாற்றிக் கொண்ட நல்லவர். என்றாலும், தீவிர ஈரான் தேச பக்தர். ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் தலைவர் நஸ்ருல்லாஹ்வை நேசிப்பவர். சலபிகளை ஏற்றுக் கொள்ளாதவர். சவூதியுடன் குரோதம் கொண்டவர்.
“வாங்க பயாஸ்......வாங்க” முஹம்மத் சேர் கதவைத் திறந்தார்.
உள்ளே நுழைந்தேன்.
எனது ஓய்வு நேரங்களில் நான் முஹம்மத் சேரை வீட்டில் சென்று காண்பேன். எனது தந்தையின் வயதிருக்கும் அவரது அறிவுரைகளை, அனுபவங்களை கேட்டுக் கொண்டிருப்பேன்.
அன்று அவருடன் நிறைய விடயங்களைக் கதைத்தேன். அவற்றில் அல் பத்ர் 02 க்கு அவசியமான பகுதிகளை மட்டும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
“முஸ்லிம்களின் எதிரிகளின் பொருளாதாரத்தை நசுக்கி அழிப்பதற்கு, அவற்றை பலவந்தமாக அல்லது தந்திரமாக ஏமாற்றி அடைந்துக் கொள்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு. அப்படி செய்வது நபிகளாரின் முக்கிய சுன்னாக்களில் ஒன்று.”
“என்ன சேர் சொல்றீங்க?” நான் அதிர்ச்சியுடன் கேட்டேன்.
“இஸ்லாமிய வரலாற்றை படிப்பவர்கள் இதனைப் புரிந்துக் கொள்வார்கள். நீங்கள் படித்ததில்லையா?”
“நான் படித்த இஸ்லாத்தில் இப்படி இல்லையே......”
“பத்ர் யுத்தம் ஏன் நடைபெற்றது என்று தெரியுமா?”
“மக்கத்துக் குறைஷியர் மதீனாவை ஆக்கிரமிக்க வந்தார்கள். முஸ்லிம்கள் தற்காப்புக்காக போரிட்டார்கள். அவற்றில் முதலாவது போர் பத்ர் போராகும்.”
“இல்லை.......உண்மை அதுவல்ல......” முஹம்மத் சேர் கம்பீரமாக சொன்னார். ”அபூசுபியானின் தலைமையில் மக்கத்துக் குறைஷியரின் திரண்ட வியாபார செல்வங்கள் சிரியாவிலிருந்து வந்தன. அதனை கொள்ளையிட முஹம்மத் (ஸல்) படை திரட்டி சென்றார்கள். அபூசுபியானின் வியாபாரக் கூட்டத்தைக் காப்பாற்ற மக்கத்துக் குறைஷியர் படை திரட்டி வந்தார்கள். அபூசுபியான் தந்திரசாலி. இலாவகமாக அவர் தனது வழியை மாற்றி வேறு வழியில் தப்பி சென்றார். வேறு வழியின்றி முஸ்லிம்கள் வியாபாரக் கூட்டத்துக்குப் பதிலாக குறைஷியரின் பெரும் படையை எதிர் கொள்ளும் நிலமை உருவானது. அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் வெற்றியடைந்தார்கள்.”
எனக்கு குழப்பமாக இருந்தது. அவர் தொடர்ந்தார்.
“இஸ்லாமிய ஸ்டேட்ஷை காப்பாற்றுவதற்கு எவ்வாறான காரியங்களை செய்ய வேண்டுமென்ற அடிப்படை அறிவை, பெரும் படிப்பினையை பத்ர் யுத்தம் நமக்கு போதிக்கிறது.”
“என்னென்ன படிப்பினைகள்?”
“முஸ்லிம்களின் எதிரிகளின் பொருளாதாரத்தை நசுக்கும் அனைத்து செய்கைகளையும் செய்யும் உரிமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது. அதற்கு திட்டமிடுதல், காரியங்களை முன்னெடுத்தல், அவசியம் என்றால் யுத்தம் செய்தல் ஆகியன செய்ய முடியும்.”
“ஒரு நாட்டிலிருந்துக் கொண்டு அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மாறாக செயல்படுவது தண்டனைக்குரிய குற்றமல்லவா?”
“அல்லாஹ்வின் தீனை உலகத்தில் ஸ்தாபிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். முஸ்லிம்கள் அல்லாஹ்வின் சட்டங்களைத் தவிர தாகூத்களின் சட்டங்களுக்கு கட்டுப்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அல்லாஹ்வின் சட்டத்தை உலகத்தில் நிலைநாட்டும் தூய எண்ணத்துடன் தாகூத்களின் சட்டங்களுக்கு மாற்றமாக செயல்படுவது ஜிஹாதாகும்.”
மெளனமாக இருந்தேன்.
“பத்ர் யுத்தம் அந்தப் பாடத்தைப் போதிக்கிறது.”
சுன்னிகளும் ஷியாக்களும் எனது நண்பர்களாக இருகிறார்கள்.
ஆளையாள் வெட்டிக் கொல்லும் தீவிரவாதக் கொள்கையளவில் வேறுபட்டு நிற்கும் இவர்கள் அனைவரும் எனது அருமை நண்பர்கள்.
வேறுபட்ட இவர்கள் நபிகளாரின் கண்ணியத்துக்கு வேட்டுவைக்கும் ஒருவிடயத்தில் ஆச்சரியமாக ஒரே கருத்தில் இருக்கிறார்கள்.
மக்கத்துக் குறைஷித் தலைவர் அபூசுபியான் அவர்களின் வியாபாரக் கூட்டத்தைக் கொள்ளையிட முஹம்மத் (ஸல்) முன்னெடுத்த செய்கை தோல்வி கண்டதினால் பத்ர் யுத்தம் மூண்டது.
உண்மை அதுதானா?-
இன்ஷாஅல்லாஹ் இன்னும் வரும்
No comments:
Post a Comment